முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பனா மந்திரி என்ற சாந்த முதுன்கொடுவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு முக்கிய தகவல்களை மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கொலைச் சம்பவத்தின் போது காரை செலுத்திய சாரதியிடம் முன்னெடுத்த விசாரணையின் போது, முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பஸ் லலித் என்ற லலித் கன்னங்கரவினால் அந்த கொலைக்காக தமக்கு 3 இலட்சம் ரூபாவை வழங்குவதாக ஒப்புக் கொண்டதாக, குறித்த சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அந்த வாக்கு மூலத்தில்,
'சாந்த எனது நண்பர். இருப்பினும் அவரை அடிக்க வேண்டும். சாந்த ஒரு உணவகத்தை கட்டி வருகிறார். அதற்கு இன்டர் லொக் கல்லை பொறிக்க வேண்டும் என லலித் அண்ணா சொன்னதாக கூறு. அதற்காக கொண்டு வந்த பொருட்களை இறக்க வேண்டும் என சாந்தவுக்கு தொலைபேசியில் கூறு. பின்னர் லொக்கேஷன் (முகவரியை) அனுப்பியதும் அப்படி வருவதற்கு கடினம் நீங்கள் வந்து வழி காட்டுங்கள் என கூறு. அவ்வாறு வரும்போது சாந்த மீது தாக்குதல் நடத்து என லலித் கூறியதாக கைது செய்யப்பட்ட காரின் சாரதி வாக்குமூலம் வழங்கினார்.
அந்த அறிவுறுத்தல்களின்படி 'பனா மந்திரியை அழைப்பித்து அவரைப் பின்தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்தியதாக சந்தேகநபர் மேலும் கூறினார்.
பஸ் லலித் தனது போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்காக கொடுத்த காரை இந்த கொலைக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும், காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் வேறு ஒரு காரை பயன்படுத்தியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலைக் கொண்டு, விசேட விசாரணை பிரிவினர் கொலைக்காக பயன்படுத்திய காரை இன்று (15) கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன் குறித்த கார் போலி ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பனா மந்திரியும், பஸ் லலித்தும் நண்பர்களாக இருந்துள்ளனர். பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களை மிரட்டி பஸ் லலித் கப்பம் கோரி வந்துள்ளார். இது தொடர்பில் பனா மந்திரிக்கு வர்த்தகர்கள் தெரியபடுத்தியிருந்த நிலையில் அவர் பஸ் லலித்தை கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, தாம் விரும்பிய வகையில் கப்பம் கோர முடியாத நிலையில் அத்திரமடைந்த பஸ் லலித் என்ற லலித் கன்னங்கரவினால் இந்த கொலை திட்டமிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.