கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவவின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தியின் வீட்டிலேயே வைத்து இக்கொலைக்கான அனைத்து சதித்திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரிவோல்வர், சிவப்பு நிற பொலித்தீனில் சுற்றப்பட்டு செவ்வந்தியின் தாயாரின் அறையில் வைக்கப்பட்டிருந்தாகவும், அங்கிருந்து எடுக்கப்பட்ட ரிவோல்வரின் புகைப்படம் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பிரிவின் கான்ஸ்டபிளுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் விசாணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி குறித்த கொலை தொடர்பில் அனைத்து தகவல்களையும் தற்போது கைது செய்யப்பட்டு சிறை காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள்ள அறிந்திருந்தாகவும் விசாரணைகள் மூலம் புலப்பட்டுள்ளது.
இதேநேரம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட முந்தையநாள் 18 ஆம் திகதி துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரும் ,இதற்குத் திட்டங்களை வகுத்ததாகத் தெரிவிக்கப்படும் இஷாரா செவ்வந்தியும் வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர்.
இதன்போதே குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை கொள்வனவில் இஷாரா செவ்வந்தி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்செயலை மேற்கொள்வதற்காகத் தொடர்பாடல் நடவடிக்கையை முன்னெடுக்க அவர் இந்த சிம் அட்டையைப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேநேரம் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக, அன்றைய தினம் நீதிமன்றத்தில் அவரைப் பாதுகாத்து வந்த பொலிஸ் சிறப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிறைச்சாலைகள் துறையைச் சேர்ந்த சுமார் 30 அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, அவர்களின் தொலைபேசிகளை சம்பந்தப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கொலை சம்பவம் தொடர்பாக 15 சிறைச்சாலை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.