'இந்தியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டதை பாக். வீரர் மைதானத்தில் கேலிக்கை செய்தார்.." - வெடித்தது புதிய சர்ச்சை




ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்களின் செயற்பாடு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
போட்டியின் போது, மைதானத்தில் அபிஷேக் ஷர்மா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் இடையே முறுகல் ஏற்பட்டது. அவர்களை சுப்மன் கில் சமாதானப்படுத்தினார்.

 
இதற்கிடையே, போட்டியின் இடையே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களை 6-0 என்ற சர்ச்சைக்குரிய சைகையால் கேலி செய்தார்.
 
இந்த 6-0 என்பது, ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த நான்கு நாள் சண்டையில் ஆறு இந்தியப் போர் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் தரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகிறது.
 
அதைப் பிரதிபலிக்கும் வகையில், மைதானத்தில் இந்த சைகையைக் காண்பித்து கேலி செய்தார்.

 
அதோடு, கையை விமானம் பறப்பது போல் காட்டியும் உடனே அதனைச் சுட்டு வீழ்த்தியது போலவும் சைகை செய்தார்.
 
இதேபோல், அரை சதத்தை எட்டிய போது பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் பேட்டை துப்பாக்கி போன்று பிடித்து, கன் ஷாட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
 
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் ஃபர்ஹானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.
 
இரு வீரர்களுக்கு எதிரான புகாரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுப்பியுள்ளதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட அவர்கள் இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர்களின் செயலுக்கான காணொளி ஆதாரங்களை இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஹாரிஸ் ரவூஃப் மற்றும் ஃபர்ஹானின் சைகைகள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் பாகிஸ்தான் விலகி இருந்த நிலையில், அதற்கு எதிராக இந்திய அணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 
இந்த நிலையில் தான் இத்தனை நாட்களுக்குப் பிறகு இரு பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக இந்திய கட்டுப்பாட்டுச் சபை முறைப்பாடு செய்துள்ளது.