'நானும் உங்களுடன் வந்துவிடுவேன்" : விபத்தில் உயிரிழந்த கணவனின் செய்தியைகேட்ட மனைவியும் உயிரிழப்பு


நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் சிக்கி பலர்; உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில், கொழும்பு - எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத மனைவியும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இவ் விபத்தில் லியனகே கலும் துஷார சில்வா என்பவர்  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி ரசோமா ஹசந்தி திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த மனைவி, நானும் உங்களுடன் வந்துவிடுவேன் என கதறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவரின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக அவரும் உயிரிழந்துள்ளார்.

ரசோமாவின் பூதவுடல் கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு களனி, கோனவலயிலுள்ள பமுனுவில இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரியவருகின்றது.

இதேநேரம் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, கைதடி - நுணாவில் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

குருநாகலைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேநேரம் கொட்டாவை - மகும்புர அதிவேக நெடுஞ்சாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று  காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வாகனம் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்த 22 வயதுடைய இளைஞனே  நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதன்படி கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

அதன்படி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர்.