ஐக்கிய அமெரிக்க இராச்சியம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 44 சதவீத தீர்வை வரி இலங்கையின் பொருளாதார எதிர்காலத்துக்கு மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பீட பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்தார்.
ஏற்றுமதி தொழிற்றுறை வீழ்ச்சியடைந்தால் எதிர்வரும் காலப்பகுதிகளில் இலங்கையின் ஆடைத்தொழிற்றுறையில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பலர் தொழில்வாய்ப்புக்களை இழக்க நேரிடும் ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் மாற்று தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய பொருளாதார மற்றும் வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதிகளுக்கான தீர்வை வரியினை விதித்துள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கைக்கும் 44 சதவீத தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பொருளாதார மீட்சிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பு செயற்திட்ட பரிந்துரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சமூக பாதுகாப்பு மற்றும் நலன்புரித் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏற்றுமதிகளுக்கான பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் அமெரிக்கா புதிய தீர்வை வரியை அறிவித்துள்ளது.இதுவரை காலமும் 12 சதவீதமாக காணப்பட்ட தீர்வை வரி தற்போது 44 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள வரி வீதம் உயர்வானதாக காணப்படுகிறது.இதனால் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.
இலங்கையின் மொத்த உற்பத்தியில் 25 சதவீதமானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக தைத்த ஆடைகள், துணிகள் உட்பட பல பண்டங்கள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.புதிய வரி விதிப்பினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் எதிர்வரும் காலப்பகுதிகளில் வீழ்ச்சியடையும்.
வருமான இழப்பினால் ஏற்றுமதி தொழிற்றுறை வீழ்ச்சியடைந்தால் எதிர்வரும் காலப்பகுதிகளில் இலங்கையின் ஆடைதொழில் துறையில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பலர் தொழில்வாய்ப்புக்களை இழக்க நேரிடும்.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை தொடர்ந்து அரசாங்கம் ஏற்றுமதி தொழிற்றுறை குறித்து மாற்றுவழிமுறைகளை ஆராய வேண்டும். இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கும், இறக்குமதி வருமானத்துக்கும் இடையில் பாரியதொரு பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தால் பொருளாதாரத்துக்கு மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்றார்.