‘சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை’ – அரசு அறிவிப்பு

“ நாளை வேண்டுமானாலும் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய உரிமை அரசுக்கு இருக்கின்றது. ஆனால் அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் திட்டம் இல்லை.” – என்று அரச கூட்டணியின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

மொட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

“ சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவி காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினரான அமைச்சர் காமினி லொக்குகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான அதிகாரம் எமக்கு உள்ளது. அதனை தடுக்க முடியாது. ஆனாலும் அவ்வாறு செல்வதற்கு அரசு எதிர்ப்பார்க்கவில்லை.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் சுதந்திரக்கட்சிக்கு நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் வெற்றிபெற்றிருக்கமுடியாது. அரசுக்குள் இருக்கமுடியாவிட்டால் சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரம் பங்காளிக்கட்சிகளுக்கு உள்ளன. அதில் நாம் தலையிட முடியாது.” – எனவும் காமினி லாக்குகே குறிப்பிட்டார்.