சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் கொண்டுவந்த புதிய தீர்மானம்!

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பொன்றும் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நிலுவையிலுள்ள 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"காலாவதியான தற்காலிக சாரதி அனுமதிப் பாத்திரங்களை புதுப்பிக்கும் போது மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாக அச்சிடப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களில் செல்லுபடியாகும் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மேலும், அச்சிடும் இயந்திரங்கள் இன்மையால் ஏராளமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட்டு வழங்கப்படாமல், சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதிலும் கால தாமதம் இருந்து வந்தது.

இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூன்று புதிய உயர்தர சாரதி அனுமதிபத்திரம் அச்சிடும் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இதன் மூலமாக இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு வழங்க முடியும்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர கிளையில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரங்களைப்பயன்படுத்தி இந்த வாரமளவில் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணி ஆரம்பமாகவுள்ளது.

அச்சடிக்கப்படும் வாகன அனுமதிப்பத்திரங்கள் டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஒரு நாள் சேவையில் சுமார் 500 முதல் 600 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்."

சாரதி அனுமதிப்பத்திர அச்சடித்தல் மற்றும் விநியோகத்தில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக பாதுகாப்பு குறியீடு மற்றும் ஓராண்டு செல்லுபடியாகும் கால அவகாசத்துடன் தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.