'இலங்கையில் மீண்டும் இனக்கலவரம்' - வெளிவந்த புலனாய்வு எச்சரிக்கை - முக்கிய தரப்பினர் கண்காணிப்பிற்குள்

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இலங்கையில் மீண்டும் இனக்கலவரம் தூண்டப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாம் என இலங்கையின் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இலங்கையில் இனக்கலவரம் தூண்டப்படலாமென இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்களை திரட்டுமாறு இலங்கையின் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன.

அத்துடன், குருந்தூர் மலை ஆலய பகுதியினை உரிமை கொண்டாடுவதற்காக பௌத்த - இந்து உணர்வுகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் கண்காணிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டில் தேர்தலிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை விட மோசமானவையாக மீண்டும் இலங்கையில் ஏற்படும் இனக்கலவரம் காணப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.