'தெற்காசியாவிலேயே இலங்கைதான் முதலிடம்'' - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் சராசரியாக 2.5இருந்து3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தினை செலுத்துகிறார்கள் என்று புதிய பகுப்பாய்வில் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் முதல் தர பொருளியல் நுண்ணறிவு தளமாகிய வெரிட்டே நிறுவனத்தின் publicfinance.lk வெளியிட்ட பகுப்பாய்வு அறிக்கை யின்படி தற்பொழுது தெற்காசியாவிலே அதிஉயர் மின்சார கட்டணம் இலங்கையிலே உள்ளது. தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் சராசரியாக 2.5இருந்து 3 மடங்கு அதிகமாக தமது மின்சார கட்டணங்களை செலுத்துகிறார்கள்.

மேலும் இத்தளத்தில் 2024 இன் ஆரம்பத்தில் உள்ளுர் மின்சார பாவனையாளர்கள் 100,200 மற்றும் 300 அலகுகளை நுகரும் பொழுது மின்சார கட்டணம் எவ்வாறு அறவிடப்படுகிறது என்பதனையும் பகுப்பாய்வு செய்கிறது.

இதன் கணக்கீட்டின்படி வழங்குனரின் உற்பத்தி செலவு மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் மேலதிகமாக அமுல்படுத்தபட்டுள்ள  சமூக பாதுகாப்பு வரி உட்படுத்தப்பட வில்லை.

இலங்கைக்கு அடுத்து தெற்காசியாவின் உயர் மின்கட்டணம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் காணப்படுகிறது. பாகிஸ்தானுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் 100 அலகுகளை நுகரும் பொழுது 50% கூடுதலாகவும் 300 அலகுகளை நுகரும் பொழுது 97% கூடுதலாகவும் கட்டணம் செலுத்துகின்றனர்.

இலங்கையின் மின்சார கட்டணம் அதிகரித்ததற்கான காரணம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதியாகும். அதாவது இலங்கை மின்சார சபை மக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் மற்றும் திறைசேரியிலிருந்து பெறும் மானியம் மூலமும் தனது உற்பத்தி செலவினை சமப்படுத்துமென வாக்குறுதி வழங்கியுள்ளது.

பெப்ரவரி 2024இல் வரி குறைக்கப்படும் திட்டத்தின் படி மின்சார கட்டணம் 4%இனால் குறைக்கப்பட்டுள்ளது. இது மிக சிறியளவு என்பதனால் மாற்றம் எதுவும் பெரிதாக தெரியமாட்டாது. அதனால் தொடர்ந்தும் தெற்காசியாவின் உயர்ந்த மின்சார கட்டணத்தினை இலங்கை மக்களே செலுத்தப்போகின்றனர் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.