"ரணில் அமைச்சுப் பதவி வழங்கவில்லையெனில் எதிர்க்கட்சியின் பக்கம் செல்வோம்" - வெளியாகிய எச்சரிக்கை

"அதிபர் ரணில் விக்ரமசிங்க வெகுவிரைவில் எங்களுக்கு அமைச்சு பதவி தரவில்லையெனில், சுயாதீனமாக செயல்படுவோம் அல்லது எதிர்க்கட்சியின் பக்கம் செல்வோம்."

இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

அமைச்சு பதவிகளை வழங்குவதில் அதிபர் ரணில் இழுத்தடிப்பு செய்வதால் தாம் இவ்வாறு செயல்படப் போவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளனர்.

வரவு – செலவுத் திட்டத்தின் பின்னரும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை, தற்போது சர்வதேச நாணயநிதியத்தின் கடன் ஒத்துழைப்பின் பின்னரும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா என்பது நிச்சயம் இல்லாமல் உள்ளது.

ஆகவே, நாங்கள் எதிர்க்கட்சி பக்கம் செல்லுவோம் அல்லது சுயாதீனமாக செயல்படுவோம் என பசில் ராஜபக்சவிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அந்த சந்திப்பில் ஜோன்சன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என பஸிலிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.