RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு!

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ( RTE ) கீழ், ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீத இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 1,16,155 இடங்களில் சேர 86,326 பேர் விண்ணப்பித்திருந்தனர். 

பெரும்பாலான பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட, அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருந்ததால் குலுக்கல் முறையில் இன்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் நடைபெற்றது.

குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர், அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டு, இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. அதிகபட்சமாக திருவள்ளூரில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும், சென்னையில் 400-க்கும் அதிகமான பள்ளிகளிலும் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட குழந்தைகளை வரும் 3-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள்ளாக சம்மந்தப்பட்ட பள்ளிக்கு அழைத்துச் சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ள பெற்றோர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.