கனடா செல்லிவிருந்த இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு : 20 இலட்சம் ரூபாவும் மாயம், முல்லைத்தீவில் சம்பவம்


கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று அங்கு செல்வதற்காக வங்கியிலிருந்து 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் சென்ற இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு வவுனிக்குளம் பகுதியில் நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தராசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
அவர் இறப்பதற்கு முன்னர் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல தொலைப்பேசி குறுஞ்செய்திகளைக் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
வவுனிக்குளம் வழியாக சென்ற பொதுமக்கள் குளத்தின் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பாதணியும் இருப்பதைக் கண்டு, குளத்தின் அருகில் எவரையும் காணாததால் சந்தேகமடைந்து பாண்டியன்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் உயிரிழந்த இளைஞனின் உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது மரணம் சந்தேகத்திற்குரியது என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
 
வங்கியிலிருந்து அவ்இளைஞன் மீளப்பெற்றதாகக் கூறப்படும் 20 இலட்சம் ரூபா பணமும் காணாமல் போனதால் சந்தேகம் மேலும் அதிகரித்துள்ளதாக குடும்பத்தினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
 
சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்;கு உத்தரவிட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாண்டியன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்