அஞ்சல் வாக்குகளை எங்கு, எவ்வாறு செலுத்தலாம் ? : வெளியானது அறிவிப்பு


ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 
இதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகங்களில் அஞ்சல் மூல வாக்குகளைச் செலுத்த முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
அத்துடன் செப்டம்பர் 4ஆம், 6ஆம் திகதிகளில் சிரேஷ்ட உதவி மற்றும் உதவி பொலிஸ் அலுவலகங்கள், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம்,
 பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்களிப்பைப் பதிவு செய்ய முடியும்.
 
எதிர்வரும் 5ஆம், 6ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இதனிடையே, அஞ்சல் மூல வாக்குகளைக் குறித்த தினங்களில் செலுத்த முடியாதவர்களுக்குச் செப்டம்பர் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிக்க மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன அஞ்சல் மூல வாக்களிப்பின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 54, 000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்த அவர்
 
இதேவேளை, சட்டவிரோத பதாகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக 12,000 பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
 
இதுவரை 15,900 சட்டவிரோத சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.