தலைவர் பிரபாகரனுடன் களத்தில் இறுதிவரை நின்ற தளபதிகளுக்கு நடந்தது என்ன...!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக நம்புகிறது.

அவருடன் இறுதிவரை களத்தில் நின்ற தளபதிகள் எவரும், குறிப்பாக பொட்டம்மான் போன்றவர்கள், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் களப்பலி ஆகியிருக்கின்றார்கள்.

அவர்கள் மாவீரர் ஆகியுள்ளனர் என்று நம்புகின்றோம். அந்த மாவீரர்களுக்கு இந்நாளில் எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம்.

இவ்வாறு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும், உயிரோடு இருப்பார் எனும் எதிர்பார்ப்போடு 14 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம்.

ஆனால் யதார்த்தத்தில் அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தப்பிப் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அடுத்த ஆண்டில் இருந்து மேதகு பிரபாகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதை நாங்கள் பின்பற்றுவோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சர்வதேச இனப்படுகொலை பெருந் துயர நாளை வருடா வருடம் நினைவுக்கூர்ந்து வருகின்றது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் உண்மையான எதிரிகளை இனங்கண்டு, அவர்களை எதிர்கொள்வதும் மிக முக்கியமானது, அதனை உணர்ந்து ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கு, கட்டமைப்பதற்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் கைகோர்த்து பயணிப்போம் என்பதை உறுதிமொழியாக இந்த நாளில் தெரிவித்து நிற்கிறோம்.

தாயகம், தேசியம், தன்னாட்சி எனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதில், அந்த கொள்கைகளுக்கான ஆதரவுகளை வென்றெடுப்பதில் ஜனநாயகத்துடன் சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களமாடும் என்பதையும் உறுதிமொழியாக அறிவிக்கிறோம்."

இவ்வாறு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார்.