தங்களுக்குக் கிடைத்த ஆடுகளம் சிறந்தது அல்ல - மெத்தியூஸ் - சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி


இலங்கை அணி பங்கேற்கும் ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

குறித்த போட்டிக்காக இலங்கை அணி வீரர்கள் நேற்று (06) தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் தங்களுக்குக் கிடைத்த பயிற்சி வசதிகள் மற்றும் ஆடுகளம் என்பன சிறந்ததாக அமையவில்லை என இலங்கை அணியின் ஏஞ்செலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள போட்டி மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகச் செயற்படுவோம் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேநேரம் ஐசிசி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதன்படி 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சுப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

அதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 18 ஓட்டங்களைப் பெற்றது.

எவ்வாறாயினும் சுப்பர் ஓவரில் பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.