கடுமையாக பரவும் கொவிட் -சில வைரஸ் கட்டுப்பாடுகளை எளிதாக்கியுள்ள சீனா அரசாங்கம்!

அதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது.அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள டசன் கணக்கான மாவட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) கொவிட் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டன.

நாடு புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்றும் நாட்டின் துணைப் பிரதமர் அறிவித்தார். துணைப் பிரதமர் சன் சுன்லன், நோயை ஏற்படுத்தும் வைரஸின் திறன் பலவீனமடைந்து வருவதாகக் கூறினார்.சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகளைக் காணும் நிலையில் இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மேற்கு ஜின்ஜியாங் பகுதியில் உள்ள உயரமான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததால் அமைதியின்மை ஏற்பட்டது. பல சீனர்கள் நகரத்தில் நீண்டகாலமாக இருக்கும் கொவிட் கட்டுப்பாடுகள் இறப்புகளுக்கு பங்களித்ததாக நம்புகிறார்கள், இருப்பினும் அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள்.இது பல்வேறு நகரங்களில் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. பின்னர் பலத்த பொலிஸ் பிரசன்னத்திற்கு மத்தியில் அவை தணிந்தன.

இதனிடையே, குவாங்சோ போன்ற முக்கிய நகரங்களில் உள்ள கட்டுப்பாடுகள் புதன்கிழமை திடீரென நீக்கப்பட்டன, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு சமூகம் லேசான அறிகுறிகளுடன் கூடிய கொவிட் தொற்றுகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதித்தது.ஷாங்காய் மற்றும் சோங்கிங் போன்ற பிற முக்கிய நகரங்களும் சில விதிகளை தளர்த்தியுள்ளன.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சமீபத்திய நாட்களில் சீனா அதன் அதிகபட்ச தினசரி கொவிட் தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. புதன்கிழமை 36,000க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இருப்பினும், 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு இந்த எண்ணிக்கை இன்னும் சிறியதாக உள்ளது மற்றும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதிகாரப்பூர்வமாக 5,200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.