கடினமான மூன்று வார காலம் ஆரம்பம் - ரணில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

எதிர்வரும் மூன்று வாரங்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு குறித்த கடினமான காலம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டது. 

நாட்டுக்கு வந்துள்ள கப்பலில் இருந்து தரையிறக்கப்படும் 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை வைத்தியசாலைகள், உணவகங்கள், தகன சாலைகள் என்பனவற்றுக்கு வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் கூறியதைப் போன்று, இந்த 3 வாரங்கள்தான், எரிபொருளுக்கு மிகவும் கஷ்டமான காலமாகும். குறிப்பாக எரிவாயுவையும், எரிபொருளையும் பெற்றுக்கொள்ளவதற்காக உள்ள வரிசைகள் மூலம் அந்த கஷ்டநிலை தெரிகிறது.

எரிவாயுடன் ஒரு கப்பல் வந்துள்ளது. அந்தக் கப்பலில் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு உள்ளது. அந்த எரிவாயுவானது, குறிப்பாக மொத்த விலைக்கு கொள்வனவு செய்த வைத்தியசாலைகள், உணவகங்கள் மற்றும் தகன சாலைகளுக்கு வழங்கப்படும். அதன் பின்னர் வரும் கப்பல்கள் மூலம், 4 மாதங்களுக்கு எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள எமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தற்போதுள்ள நிலைமையின் படி, அதனைப் பெற்றுக்கொள்ள 14 நாட்களாகும். எனினும், அதற்கு முன்னர் ஒரு கப்பலையேனும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

"மின் உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் தற்போதைய எரிபொருள் இருப்பு ஒரு வாரத்திற்கு போதுமானது. எவ்வாறாயினும், ஜூன் 16 ஆம் திகதி 40,000 மெட்ரிக் தொன் எரிபொருள் ஏற்றுமதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மேலும் 2 ஏற்றுமதிகள் உறுதிசெய்யப்பட்டால், மாத இறுதி வரை போதுமான எரிபொருளை உறுதி செய்ய முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.

புதிய இந்திய கடன் திட்டம் கிடைத்ததும், அடுத்த 4 மாதங்களுக்கு போதுமான எரிபொருளை நாடு பாதுகாக்க முடியும் என்றும் பிரதமர் கூறினார்.