இருதய சத்திரசிகிச்சை திங்கள் முதல் குறையும்


மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக திங்கட்கிழமை (20) முதல் பல சத்திர சிகிச்சைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் இருதய மயக்க மருந்தியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் கோபம் காரணமாக பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க மறுத்து வருகின்றமையே இந்த தீர்மானத்துக்கு காரணம் என தெரியவருகிறது.

அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூட, 6 முதல் 10 மணிநேரம் வரை எரிபொருள் வரிசைகளில் செலவழிப்பதாக குறிப்பிட்டுள்ள நிபுணர்கள், தாங்கள் இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்களை இயக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த எண்ணிக்கையிலான கனிஷ்ட வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், தொழிநுட்ப பணியார்கள் உள்ளிட்டோர் கடமைகளில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மிக முக்கியமான மற்றும் அவசரமான சத்திர சிகிச்சைகளை மட்டுமே தாங்கள் செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.