ஒரு தலைக் காதலால் குடும்பப் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!


வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், ஆண் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

வவுனியா பறயனாளங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நீலியாமோட்டை பகுதியில் ஒருதலை காதல் காரணமாக குடும்ப பெண் ஒருவர் உள்ளூர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை பெண்ணின் படுகொலைக்கு காரணமான 24 வயதுடைய இளைஞன் ஒருவரும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

நீலியாமோட்டையில் வசிக்கும் நியூட்டன் என்ற குடும்பஸ்தர் தனது மனைவி மற்றும் 1 1/2 வயது மகளையும் மனைவியின் அத்தையின் வீட்டில் தங்க வைத்துவிட்டு, இரவு நேரம் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

குளத்தில் மீன் பிடிப்பதற்காக சென்ற அவர் இன்று அதிகாலை வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது வீட்டின் அறையில் உறங்கிகொண்டிருந்த தனது மனைவி இரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துடன் அங்கு தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் அத்தையை எழுப்பி சம்பவத்தை தெரிவித்ததுடன் அயலவர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்குசென்ற பறயனாளங்குளம் காவல்துறையினர் விசாரணைகள் முன்னெடுத்தனர்.

குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் அதனுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் தேடப்பட்ட இளைஞர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு முன்பாக சூட்டுக்காயத்துடன் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. அவரது சடலத்துடன் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் நியூட்டன் தர்சினி வயது 26 என்ற ஒரு பிள்ளையின் தாயும், சிவபாலன் சுயாந்தன் வயது 24 என்ற இளைஞருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை உயிரிழந்த இளைஞர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்ததுடன், அந்த பெண் திருமணம் முடித்த பின்னரும் அவருக்கு தொடர்ச்சியான தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக காவல்துறையினர் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே உயிரிழந்த இளைஞன் இடியன் துப்பாக்கி மூலம் அந்தபெண்ணை கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.