வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம்!

தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தை மனிதாபிமான படை நடவடிக்கை என்ற பெயரில் கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவந்த சிங்கள பேரினவாத அரசாங்கம், அன்று முதல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

ராஜபக்ஸவினரின் ஆட்சிக்காலத்தில் வெளிப்படையாக முன்னெடுக்கப்பட்ட இந்த அடைக்குமுறைகள், தற்போதைய ரணில் தலைமையிலான அரசின் கீழ் மறைமுகமான முறையில் கட்டமைக்கப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றமை தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றது.

குறிப்பாக வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பதை மாற்றி அமைக்கும் சதிச் செயற்பாடுகளில் சிறிலங்காவின் பேரினவாத அரச இயந்திரம் மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.

இந்த செயற்பாடுகளுக்கு அரச திணைக்களங்கள் மாத்திரமல்லாமல், சிறிலங்காவின் முப்படையினருடன் இணைந்து காவல்துறையினரும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.

அந்த வகையில் தமிழீழி விடுதலை புலிகளின் உரிமை போராட்டத்தை உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளின் உதவிகளுடன் முடிவுக்கு கொண்டுவந்த சிங்கள பேரினவாதம், தமிழர் தாயகத்தை சிங்கள மயப்படுத்தும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக துரிதப்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு உத்திகளை கையாளும் சிங்கள பேரினவாத அரசு, தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரிக்கும் அதேவேளை அவர்களின் உயிர்வாழ்க்கைக்கான உயிர்மூச்சான வாழ்வாதாரங்களையும் அழித்துவருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதவனை, மயிலத்தடு கால்நடை பண்ணையாளர்கள், தமது கால்நடைகளுக்கான மேச்சல் தரை நிலங்கள் அயல் மாவட்ட சிங்கள பெரும்பான்மையின மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பயிர் செய்யப்படுவதால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

குறித்த மேய்ச்சல் தரை காணிகளை மீட்டுத் தருமாறு மட்டக்களப்பு சித்தாண்டியில் கடந்த 50 நாட்களையும் தாண்டி போராடிவரும் கால்நடை பண்ணையாளர்களுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாமல் இழுத்தழுக்கும் நிலைமை நீடிக்கின்றது.

இதன்பின்னணியில் கிழக்கு மக்களின் பிரச்சினைகள், அனைத்து தமிழர் தாயக மக்களின் பிரச்சினைகள் என்பதன் அடிப்படையில் அதற்காக குரல்கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதையும் உணர்ந்த யாழ் பல்கலைகழக மாணவர்கள் மட்டக்களப்பு சித்தாண்டிக்கு சென்று மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

இதன்மூலம் கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு வடக்கு மக்களும் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு கிழக்கு மக்களும் ஒற்றுமையுடன் குரல்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை யாழ் பல்கலைகழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் மூலம் வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், தமிழ் மக்களை அச்சுறுத்தும் நோக்குடனும் ஆர்ப்பாட்டத்தை நடத்திய யாழ் பல்கலைகழக மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை சிங்கள பேரினவாதம் தடுக்கும் முயற்சியில் செயற்படுகின்றமை அப்பட்டமாக தெரிகிறது.