தென்னிலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்தவரே சவேந்திர சில்வா - அநுர வெளிப்படை


 முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவுடன் எமக்கு சில விடயங்களில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் இருந்ததை மதிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், 

“மக்கள் எழுச்சியின் போது அதனை ஒடுக்குவதற்குத் தோட்டாக்களைப் பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தேவையான நடவடிக்கையை முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேற்கொள்ளவில்லை என அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வா நடவடிக்கை எடுக்காததால் தான், அவர் விசாரணைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எனவே நீங்களும் அவ்வாறு இருக்க வேண்டாம் என மற்றைய தரப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கவே அவருக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்குத் தோட்டாக்கள் பயன்படுத்தாமை தொடர்பில் சவேந்திர சில்வாவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு, அவருக்குத் தண்டனை வழங்கப்பட முயற்சி எடுக்கப்படுமானால் நாம் சவேந்திர சில்வாவின் பக்கம் நிற்போம்.

ஏனெனில் அன்று அவர் மக்கள் பக்கமே நின்றுள்ளார். இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்துள்ளார்” எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.