பாராளுமன்ற வளாகத்தில் இறுதியாக வலம் வந்த சம்பந்தனின் பூதவுடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்   இராஜதவரோதயம் சம்பந்தனின்  பூதவுடல் இன்றயதினம் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பலரும் அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக இரா.சம்பந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இன்று நண்பகல் வரை அங்கு வைக்கப்பட்டிருந்த சம்பந்தனின் பூதவுடல் பிற்பகல் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் அன்னாரது பூதவுடல் நாளை  திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின்னர் இறுதிச் சடங்கு எதிவரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9ஆவது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.