அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி கட்சிகளின் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நேற்று (03) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி,
''அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அறிக்கையை உதய செனவிரத்ன என்னிடம் சமர்ப்பித்தார்.
நாம் அளித்த மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். நாம் வாக்குறுதி அளிப்பதற்காக மேடைகளில் ஏறுவதில்லை.
வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தான் மக்கள் முன்னிலையில் சொல்கிறேன். தங்கள் விஞ்ஞாபனங்களில் உள்ள சம்பள உயர்வு குறித்த வரிகளை நீக்கிவிடுமாறு ஜே.வி.பியிடமும் ஐ.ம.ச. யிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
2023 இல் வாழ்க்கைச் செலவு உயர்ந்து இருந்தது. தற்பொழுது ரூபா பலப்படுத்தப்பட்டது. வருமானம் அதிகரிக்கப்பட்டது. 2024 பல நிவாரணங்கள் வழங்கியுள்ளளோம்.
அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது. இதனுடன் எமது செயற்பாடுகளை நிறுத்தப் போவதில்லை.
ரூபா மேலும் பலமடையும். இரண்டொரு வருடங்கள் செயற்படுவதால் மாத்திரம் நாட்டில் முழுமையான ஸ்திர நிலை ஏற்படாது.
எமது திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். மொத்தத் தேசிய உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும். பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இருக்கும் வருமானத்தை கொண்டு செலவுகள் மேற்கொள்ளப்படுகிறன. அரச துறை மட்டுமன்றி தனியார் துறை சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்