சாய்ந்தமருது கொலை சம்பவம்: சந்தேக நபர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

குறித்த வழக்கு நேற்று (22) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி - பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள்  சமர்ப்பண வாதங்களை ஆராய்ந்த பின்னர் குறித்த ஓகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) அதிகாலை அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு - 09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட குடும்ப மோதலில் திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

பின்னர் அன்றைய தினம் இரவு குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் உட்பட ஐந்து சந்தேக நபர்களை வாழைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேலும் மரணமடைந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் இரவு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.