திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள், அவர்கள் தலையை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது அம்மாணவிகளின் மதசுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருகோணமலை நகரை அண்மித்து வாழும், பெரும்பாலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இதன்போது பரீட்சை முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் மாணவர்களின் காதுகள் வெளித்தெரியவேண்டும் என விதிக்கப்பட்டிருந்த வரையறைக்கு அமைவாக அவர்கள் இறுக்கமாக அணியும் ஹிஜாப்பை தவிர்த்து, தளர்வான - வெளித்தெரியக்கூடியவாறான வெண்ணிற துணிகளையே அணிந்திருந்தனர்.
அதேபோன்று அன்றைய தினம் உரிய பரீட்சை நிலையங்களில் மேற்பார்வையில் ஈடுபட்டவர்கள் அம்மாணவர்களைப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதித்திருந்தனர்.
இருப்பினும் கடந்த மேமாதம் 31 ஆம் திகதி உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் வெளியான நிலையில், பரீட்சைகள் திணைக்களமானது ஹிஜாப் அணிந்திருந்த மாணவர்கள் 'புளுடுத் ஹேன்பிரிகளை' பயன்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு, அம்மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடாது இடைநிறுத்தியுள்ளது.
இதன்விளைவாக அம்மாணவர்கள் பல்கலைக்கழக உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படக்கூடிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் பரீட்சைகளின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது உரிய அதிகாரிகளின் பொறுப்பாகும்.
இதன்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மத அல்லது பாலின அடிப்படையில் எந்தவொரு மாணவரையும் புறந்தள்ளும் விதமாக அமையக்கூடாது.
அவ்வாறிருக்கையில் இந்தட மாணவர்களின் உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளை இடைநிறுத்திவைப்பது அவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் சமூகங்களுக்கு இடையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முனைவதாகக் கூறும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கும் முரணாகவே அமையும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.