பலரிடம் பணம் பெறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் - ஆணைக்குழு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்


ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

வேட்பாளர்கள் பலர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர் ஒருவருக்கு தேர்தல் ஆணைக் குழுவால் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளோரில் 15 பேர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளெனத் தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள சுமார் 30 பேர் இதுவரை பிரசார நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.

சிலர் கட்சி அலுவலகங்களைக்கூட இன்னும் திறக்கவில்லை என தெரிவித்தார்.


இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், குறித்தொதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சிஃவேறு கட்சியின் பெயர் உள்ளிட்ட விடயங்களுடனான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அதிவிசேட வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக தபால் மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் 7 லட்சத்து 12 ஆயிரத்து 319 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 4,5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அதற்கிணங்க மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் செப்டம்பர் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த 3 தினங்களிலும் தபால் மூலம் வாக்களிப்பை மேற்கொள்ள முடியாதவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் தெரிவித்துள்ளார்.