இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய குடிமக்கள் காயமடைந்தனர்.
3 வாரங்களைக் கடந்து நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2-ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
தரை மார்க்கமாக நுழைந்து காஸா பரப்புக்கு மேலேயும், காஸா பதுக்குக் குழிக்குள்ளும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் நீடிக்கும் சூழலே இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவிக்கிறார். காஸாவில் மட்டும் 7,703 பேர் வரை இறந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகமானோர் பெண்கள், குழந்தைகள். காஸாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,000-ஐ கடந்துள்ளது. போரில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்பும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸாவில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 3,320 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.