கோட்டாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசாங்கம்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவித சலுகைகளோ இராஜதந்திர சலுகைகளையோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அரசியல் தஞ்சம் கோருபவர்களின் இலக்காக சிங்கப்பூர் மாறும் என்ற கவலைகள் குறித்து ஆளும் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங்கின் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம், சரியான ஆவணம் மற்றும் நுழைவுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் வெளிநாட்டினர் சிங்கப்பூருக்குள் வர அனுமதி வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவரை அவரது அரசாங்கம் தேடினால் அல்லது கோரிக்கை விடுத்திருந்தால், சட்டங்களின்படி அரசாங்கம் அந்த நாடுகளுக்கு உதவி செய்யும் என்றும் கே.சண்முகம் குறிப்பிட்டார்.