ரணிலுக்காக ஒன்று கூட்டிய மொட்டுவின் 48 அமைச்சர்கள் : கொழும்பில் வெவ்வேறு இடங்களில் இரகசிய பேச்சு



அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 48 பேர் கொழும்பில் இரண்டு இடங்களில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றை நேற்று  நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 30பேர் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் 18 பேர் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நியமித்தால் ஏற்படும் நிலைமைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தருணத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு இரு தரப்பினரின் இறுதி உடன்படிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், அரசியல் அலுவலகம் ஸ்தாபித்தல், வாக்களிப்பு முகவர்கள் நியமனம், ஊடகப் பணிகள் போன்ற விடயங்களில் இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் ஆதரவை வழங்குவது தொடர்பில் விரிவான வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதுதவிர, அரசால் தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க, தொகுதி அளவில் முறையான பொறிமுறையை அமைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.  

இதேநேரம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வெளியே ஓர் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தால், பிரதமர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டமொன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாறு பஸில் ராஜபக்சவிடம் ரணில் கோரியுள்ளார். எனினும், மொட்டு கட்சியின் நிலைப்பாட்டை அவர் உறுதியாக தெரிவிக்கவில்லை.

இருவருக்கும் இடையில் நேற்று மாலையும் சந்திப்பொன்று நடைபெற்றது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கப்பெறுமா அல்லது இல்லையா என்பது இன்றைய கூட்டத்தின் பின்னர் தெரியவரும் என அறியமுடிகின்றது.

இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.