இந்திய அளவில் 300 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ள கேஜிஎஃப் 2!

யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு, இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.

யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் 2 படம் முதல் நாளன்று ரூ. 134.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இதன் ஹிந்திப் பதிப்பு தற்போது புதிய சாதனையைப் படைத்து வருகிறது. இதற்கு முன்பு 2019-ல் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய வார் படம், முதல் நாளன்று ரூ. 51.60 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேஜிஎஃப் 2 ஹிந்திப் பதிப்பு அதன் சாதனையை உடைத்து முதல் நாளன்று ரூ. 53.95 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்தது.

கேஜிஎஃப் 2 (ஹிந்தி) ஐந்து நாள்களில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டியது. பாகுபலி 2 (ஹிந்தி) படம் ஆறாவது நாளன்று தான் இந்தியாவில் இந்த இலக்கை எட்டியது. நேற்று (ஞாயிறு), ரூ. 22.68 கோடி வசூலித்தது. இதையடுத்து 11-வது நாளன்று ரூ. 300 கோடி வசூலை எட்டி மகத்தான சாதனை படைத்துள்ளது கேஜிஎஃப் 2 (ஹிந்தி). நேற்று வரை ரூ. 321 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிகமாக வசூலித்த 6-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

கேஜிஎஃப் 2 (ஹிந்தி): இந்திய வசூல்

2-வது நாள்: ரூ. 100 கோடி

4-வது நாள்: ரூ. 150 கோடி

5-வது நாள்: ரூ. 200 கோடி

7-வது நாள்: ரூ. 250 கோடி

11-வது நாள்: ரூ. 300 கோடி

ஹிந்திப் படங்களில் ரூ. 300 கோடி வசூலை எட்டிய படங்கள்: பிகே, பஜ்ரங்பைஜன், சுல்தான், டங்கல், டைகர் ஹிந்தா ஹை, பாகுபலி 2 , பத்மாவத், சஞ்சு, வார், கேஜிஎஃப் 2. இந்தப் படங்களில் ரூ. 400 கோடி மற்றும் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டிய ஒரே படம் – பாகுபலி 2 (ஹிந்தி) மட்டுமே.

2019-க்குப் பிறகு (வார் படம்) ரூ. 300 கோடியை இந்தியாவில் வசூலித்த முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் கேஜிஎஃப் 2 பெற்றுள்ளது.

நேற்று வரை ரூ. 321 கோடி வசூலித்துள்ள கேஜிஎஃப் 2 (ஹிந்தி) படம் ஆமிர் கானின் டங்கல் படம் வசூலை (ரூ. 387.38 கோடி) முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது நிகழும்போது, இந்தியாவில் அதிக வசூலைக் கண்ட ஹிந்திப் படங்களில் முதல் இரு படங்களாக பாகுபலி 2, கேஜிஎஃப் 2 என இரு தென்னிந்தியப் படங்களே இருக்கும்.