பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து பொலிஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை, பலதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
சந்தேகநபருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தலுக்கான தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபரிடம் பெருந்தொகை பணம் புழக்கத்தில் இருந்தமை விசாரணைகள் மூலம் கண்டறிப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் அது கொலையா அல்லது தற்கொலையான என்பது குறித்து உறுதியாக தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
களுத்துறையில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று காலை (09.05.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தில் இரகசிய சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போதே பிரதான சந்தேகநபர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            