ரணில் மீண்டும் ஜனாதிபதியானால் 5 ஆண்டுகளில் உலகில் பலமான நாடாக இலங்கை மாறும் என தகவல்


ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், உலகின் பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
 
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்  இதனைத் தெரிவித்த அவர்
 

ஜனாதிபதி தேர்தலையோ வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை.
 
தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசினாலும் அரசாங்கம் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தும்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே பாரிஸ் மாநாட்டில் நாட்டின் கடனை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் நாடும் மக்களும் எதிர்பார்க்கும் பொருளாதார, அரசியல், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை தற்போதைய ஜனாதிபதியால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.
எனவே, அவரை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், உலகின் பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்க முடியும்.
 
இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு எப்படி இருந்தது என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

முழு நாடும் விரக்தியில் இருந்த நிலையில், ஜனாதிபதி சிக்கலில் இருந்து நாட்டைப் பொறுப்பேற்கும் போது ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மறு பக்கம் பாரிய மக்கள் எதிர்ப்புமாக இருந்தது.
 
அந்த சந்தர்ப்பத்தில் நாம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்வதற்கு எடுத்த முடிவு 100 சதவீதம் சரியானது என்பதை எண்ணி இன்று மகிழ்ச்சியடைகிறோம்.
தற்போது ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக வதந்திகள் எழுகின்றன. அவ்வாறு தேர்தலை ஒத்தி வைக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றார்.