கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வானூர்திகள், லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் இறந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மீதான போரின் புதிய கட்டம் என்று தற்போதைய தாக்குதல்களுக்கு பெயரிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம், லெபனானில் 1,000 க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாஹ்வின் கோட்டைகள் அல்லது மக்களின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வசதிகள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேல் இதுவரை குறைந்தது 558 லெபனான் மக்களைக் கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
இறந்தவர்களில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உள்ளனர், சுமார் 2,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1975-1990 உள்நாட்டுப் போருக்குப் பிறகு லெபனான் அனுபவித்த மிகக் கொடூரமான தாக்குதல் என்று நம்ப்பபடும் இந்த தாக்குதல்கள் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவத்திலிருந்து லெபனானின் தெற்கில் வசிக்கும் மக்களுக்கு சுமார் 80,000 தொலைபேசி அழைப்புகள் பதிவாகியிருந்தன.
இதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட பீதி, குழப்பம் மற்றும் இடையூறுகளால், தலைநகர் பெய்ரூட்டுக்கான முக்கிய கடற்கரை சாலை பல கிலோமீட்டர்களுக்கு தடைசெய்யப்பட்டது.
ஹிஸ்புல்லாஹ் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது, அதனால் இடம்பெயர்ந்த குடிமக்களை வடக்கே திருப்பி அனுப்ப முடியும்
இதேவேளை காசாவில் உள்ள தமது நெருங்கிய கூட்டாளியான ஹமாஸ் உடன் இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கையை அடையும் வரை, இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்துள்ளது.
முன்னதாக செப்டெம்பர் 17ஆம் திகதியன்று இஸ்ரேலின் தாக்குதல்களில் முதல் கட்டமாக ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களின் பேஜர்கள் வெடிக்கவைக்கப்பட்டன.
அதன் பின்னர் ஒருநாள் கழித்து அவர்களின் வோக்கி டோக்கிகள் வெடிக்கவைக்கப்பட்டன. இந்த சம்பவங்களிலும் பலர் கொல்லப்பட்டனர்.