326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் படையால் மீட்கப்பட்ட பணயக் கைதி..!



ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதுடன், இஸ்ரேலிலிருந்து 251 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

எனினும் ஒப்பந்த அடிப்படையில் 105 பணயக் கைதிகளை இஸ்ரேல் மீட்டதுடன், மீட்பு நடவடிக்கை மூலம் மேலும் 8 பணயக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் 110 இக்கும் மேற்பட்டோர் இன்னும் பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் காசாவில் உள்ள தங்களது பணியாளர்களின் செயற்பாட்டை மறுஅறிவிப்பு வரை ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் நிறுத்தியுள்ளது.
 
இஸ்ரேலிய சோதனைச் சாவடிக்கு அருகில் தங்களது அதிகாரிகள் சென்ற வாகனங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள உலக உணவுத் திட்டம், மனிதாபிமான உதவிகளைக் கொண்டு சென்ற பாரவூர்திகளை இலக்கு வைத்துக் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
 
எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் பதில் எதுவும் வழங்கவில்லை.
 
மனிதாபிமான உதவிப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.