செருப்பிற்குள் கடத்தப்பட்ட தங்கம் -அதிர்ந்து போன அதிகாரிகள்(காணொளி)


பெங்களூரு விமான நிலையத்தில் செருப்புக்குள் வைத்து தங்கம் கடத்த முயன்ற பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாங்கொக்கில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை வழக்கமான முறையில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர்.

அப்போது. அவருடைய செருப்பை ஸ்கான் செய்தபோது உள்ளே வித்தியாசமான பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதனையடுத்து செருப்பை பிரிக்க உள்ளே நான்கு தங்க கட்டிகள் இருந்திருக்கின்றன. அதன் எடை 1.2 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 69.40 இலட்ச ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள சுங்கத்துறை அதிகாரிகள்,"பாங்கொக்கில் இருந்து பெங்களூரு வந்த பயணி ஒருவரை சோதித்தோம். அவருடைய செருப்பில் 4 தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கின்றனர்.

பயணியை விசாரிக்கும்போது அவருடைய ஆவணங்களை பார்த்த பிறகு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதனையடுத்து அவரை பரிசோதிக்கும்போது தான் அவர் தங்க கடத்தலில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து சுங்க சட்டத்தின்படி அவரை கைது செய்துள்ள அதிகாரிகள், தங்கத்தையும் கைப்பற்றி இருக்கின்றனர்.