இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம்...! வெளியான தகவல்

புதிய ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில் எரிபொருளின் விலையில் இன்று (30) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பெரும்பாலும் எரிபொருளின் விலை குறைக்கப்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த மாத விலைச்சூத்திரத்தின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 332 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.