ஜனாதிபதி தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுறுத்தல்!

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிப்பதால், இதுதொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற புனர்வாழ்வு அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

13ஆம் திருத்தம் ஊடாக அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கு நாடு பொருளாதாரத்தில் முதலில் அபிவிருத்தி ஏற்பட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாமல் அதனை நிறைவேற்றினால் நாட்டில் இனவாதம், பிரிவினைவாதம் ஏற்பட்டு மக்களிடையே குழப்பமே ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

அனைத்து மாகாண முதலமைச்சர்களும் பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைப்பதை விரும்புவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறிய கருத்து முற்றிலும் பொய்யானது எனவும் அவ்வாறு எவரும் அதனை கேட்கவில்லை எனவும் கூறினார்.