கொழும்பில் (Colombo) நடைபெற்ற முகநூல் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 18 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தில் நேற்று (29) மாலை நடைபெற்ற களியாட்ட நிகழ்வின் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ராகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கொட்டாஞ்சேனை, புளுமண்டல், தெமட்டகொடை, வெல்லம்பிட்டி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 மாணவர்களும் 02 மாணவிகளும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களை ராகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.