இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு : சன நெரிசலில் சிக்கி பலர் காயம்இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களின் வெற்றி பேரணி நேற்று மும்பையில் நடைபெற்றது.

9ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29ஆம் திகதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்ததி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.
இந்த வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களை காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே சில மணி நேரம் ஸ்தம்பித்து போனது.
இந்த வெற்றி பேரணி மெரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இ
தனால் மும்பை கடற்கரை பகுதியில் 7 முக்கிய வீதிகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது.  பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்து.

இந்திய வீரர்களின் பேரணி மாலை 5 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆனால் ஊர்வலம் தொடங்க தாமதம் ஆனதால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் முடங்கி போனது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாறினர்.

காலதாமதம் ஆனாலும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கிண்ணத்துடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ரசிகர்கள் குவிந்ததால் சன நெரிசல் ஏற்பட்டது. இந்த சன நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 2 பேர் மயக்கமடைந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் மும்பை பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.