இலங்கை மின்சார சபைக்கு பல கோடிக்கணக்கில் பாரிய நிதி இழப்பு!

இலங்கை மின்சார சபைக்கு கடந்த 08 மாதங்களில் பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதாவது, மின்சார மானியை மாற்றுதல், பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளால் குறித்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதிகளில், மின்சார மானி மாற்றங்கள் தொடர்பாக 1,041 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் 7 கோடியே 64 இலட்சத்து 27 ஆயிரத்து 649 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, மின்சார கொள்முதலால் 7 கோடியே 90 லட்சத்து 74 ஆயிரத்து 857 ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மின் கம்பிகளில் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டதால், அதற்காக 26 இலட்சத்து 47 ஆயிரத்து 207 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு, 36 இலட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் நட்ட ஈடாக அறவிடப்பட்டுள்ளது.