உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் தொடர்ச்சியாக 2019 ஏப்ரல் 25ஆம் திகதி நடந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான சஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது என சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரியவின் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டதன் பின்னர் கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் தொடர்பிலும் ஷானி அபேசேகர இதன்போது அதிர்ச்சி தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது இராணுவ புலனாய்வாளர்கள் சிஐடியினரை தவறாக வழிநடத்தினார்கள்.

புலனாய்வு அமைப்புகளிற்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் இடையில் நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி 250 பேரை பலிகொண்ட தாக்குதல் தனித்த ஒரு சம்பவம் அல்ல, நன்கு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று.  விசாரணைகளின் போது இராணுவபுலானய்வு பிரிவினர் இரண்டு தடவை விசாரணையாளர்களை தவறாக வழிநடத்த முயன்றனர்.

தெகிவளையில் உயிரிழந்த தற்கொலை குண்டுதாரி தொடர்பாக இராணுவ புலனாய்வு பிரிவினர் தவறாக வழிநடத்தினார்கள். அந்த தற்கொலை குண்டுதாரிக்கு இராணுவ புலனாய்வாளர்களுடன் தொடர்பிருக்கலாம் இது மறைக்கப்பட்டது.

இரண்டாவதாக உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு முன்னர் இடம்பெற்ற வவுணதீவு படுகொலைகளை( 2018) விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என இராணுவபுலனாய்வு பிரிவினர் குற்றம் சாட்டினார்கள். தங்களின் கதையை வலுப்படுத்துவதற்காக இராணுவ சீருடையை அங்கு மறைத்து வைத்தனர்.

ஏப்ரல் 25ஆம் திகதி இந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமான சஹ்ரான் ஹாசிம் குழுவினர் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு இலங்கையின் புலனாய்வு பிரிவினர் நிதி உதவி செய்தனர் என தெரிவித்திருந்தார். இது குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

வவுணதீவு கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டனர் என நான்கு தடவை இராணுவ புலனாய்வாளர்கள் தவறாக வழிநடத்தினார்கள். இதற்கான நோக்கம் என்னவென்று தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.