அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல் : ரஷ்ய ட்ரோன்களை துவம்சம் செய்த உக்ரைன்

உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்த 24இற்கும் அதிகமான ரஷ்ய ஆளில்லா வான்கலங்களை(drones) சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று(10) அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரம் உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என இருதரப்பும் தெரிவித்துள்ளன.

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்கலங்களின் இடிபாடுகள் டார்னிட்ஸ்கி, சோலோமியன்ஸ்கி, ஷெவ்சென்கிவ்ஸ்கி, ஸ்வியாடோஷின்ஸ்கி மற்றும் போடில் மாவட்டங்கள் மீது விழுந்ததாக நகர இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"ஆளில்லா வான்கலங்கள் வெவ்வேறு திசைகளிலிருந்தும் தலைநகருக்குள் நுழைந்தன. வான் பாதுகாப்புப் படைகள் 24இற்கும் அதிகமான ஆளில்லா வான்கலங்களை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

சரியான எண்ணிக்கையை உக்ரைன் விமானப்படை அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கீவ்வில் குறைந்தது 10 குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யாவிடம் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், கிரிமிய தீபகற்பத்திற்கு அருகிலுள்ள கருங்கடலில் உக்ரைனால் ஏவப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்களை வான் பாதுகாப்பு கட்டமைப்பு அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.