தடுப்புக்காவலில் இருந்தவர் சினிமாப்பாணியில் சுட்டுக்கொலை: கொழும்பில் சம்பவம்! விளக்கமறியலில் 3 காவல்துறையினர்

சந்தேக நபரை சுட்டுக் கொன்ற காவல்துறை

தடுப்புக் காவலில் இருந்த சந்தேக நபரை சுட்டுக் கொன்ற வழக்கில் காவல்நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு - வாழைத் தோட்டம் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாளிகாவத்தை - புகையிரத ஊழியர்கள் விடுதி தோட்டத்தில், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சுட்டுக் கொலைச் செய்தமை தொடர்பில் விலச்சிய காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இதற்கான உத்தரவை நேற்று ( 21) பிறப்பித்துள்ளார்.

விலச்சிய காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இலங்கசிங்க, உப்புவேலி காவல் நிலையத்தின் உப காவல்துறை பரிசோதகர் ருச்சிர சந்திம, படல்கம காவல் நிலையத்தின் காவல்துறை சார்ஜன் தயாவங்ஷ ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளவர்களாவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், மாளிகாவத்தை ரயில் ஊழியர்கள் விடுதித் தோட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்துன் லசித்த குமார் எனும் நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து வாழைத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பியிருந்தனர்.

இந் நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் 5 பேரை சந்தேக நபர்களாக பெயரிட சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சுருக்கமுறையற்ற வழக்கு விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறும் வாழைத்தோட்டம் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாக வாழைத்தோட்ட காவல்துறையினர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தனர்.

அதன்படி மேற்படி மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களும் நேற்று (21) நீதிமன்றில் சரணடைந்த பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் காவல் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆரியரத்ன மற்றும் சார்ஜன் திஸாநாயக்க ஆகியோர் இது குறித்து நீதிமன்றுக்கு அறிக்கையிட்டமை குறிப்பிடத்தக்கது.