வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக மணிரத்னம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் கதையான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனின் தளபதிகளில் ஒருவரான வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும்  இதனால் படத்தை இயக்கிய மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸ்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றை பொய்மைப்படுத்தியும் திரித்துக் கூறி படமெடுத்துள்ளதாக தனது புகாரில் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் சோழப் பேரரசரான ராஜராஜ சோழனின் படைத் தளபதியும், சோழப் பேரரச வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் வந்தியத்தேவன் குறித்து உண்மைக்குப் புறம்பாகத் திரைப்படத்தில் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போலப் பொய்யாகச் சித்தரித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாகச் சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளைப் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மாமன்னர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் சோழப்பேரரசன் உண்மையான வரலாற்றை மறைத்துத் தவறிழைத்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இத்திரைப்படத்தின் இயக்குநரான மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.