அலுவலக மேசையிலேயே "வாழை" வளர்க்கும் சீனர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்


பணிச்சுமை அல்லது பணி செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் ஊழியர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள ஊழியர்கள் ஏராளமான பழக்க வழக்கங்களை கையாண்டு வருவது இயல்பாகிவிட்டது. 


ஒவ்வொரு நாட்டிலும், அவரவர் சூழலுக்கு ஏற்ப மன அழுத்தம் போக செய்ய பல யுக்திகளை பணியாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நவீன சமூக வலைதள காலக்கட்டத்தில் எதையும் வித்தியாசமாக செய்தே பழகி போன சீனர்கள் மன அழுத்தத்தை போக்கவும் தங்களுக்கே உரிய பாணியில் புதிய முறையை கையாண்டு வருகின்றனர். 

அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க ஃபிட்ஜெட் ஸ்பின்னர், மெடிடேஷன் ஆப் உள்ளிட்டவைகளை கடந்து சீனர்கள் தற்போது வாழை விளைவிப்பதில்  இறங்கியுள்ளனர்.

மேலும், இவ்வாறு செய்வது அந்நாட்டில் பெரும் பழக்கமாகி வருகிறது. இந்த பழக்கத்தின்படி வழக்கமான வாழை சாகுபடி போன்றில்லாமல், இவர்கள் பச்சை நிறத்தில் உள்ள வாழை தார் ஒன்றை நீர் ஊற்றும் வசதி கொண்ட தொட்டியில் வைக்கின்றனர்.

பிறகு, ஒருவார காலத்திற்கு அவ்வப்போது பராமரிக்கும் போது, பச்சை நிற தாரில் இருந்து வாழை ஒவ்வொரு நாளும் படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது. முதலில் பச்சை நிறத்தில் துவங்கி இறுதியில் இளம் மஞ்சள் நிறத்திற்கு வாழை பழமாக மாறுகிறது. 

இந்த வழிமுறைகளை பார்க்கும் போது ஒவ்வொரு தருணமும் அளவில்லா மகிழ்ச்சியையும், சுவாரஸ்யத்தையும் தமக்கு அளிப்பதாக இந்த செயற்பாட்டில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பழக்கம் சீனாவின் இன்ஸ்டாகிராம் போன்ற தளமாக செயல்பட்டு வரும் ஷாங்ஷூவில் வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.