சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் பின்னணியில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் செயற்பட்டுள்ளதாக, கொழும்பின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் 275க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக செயற்பட்டவர்கள், இருந்ததாக இன்றைய தினம் (செப்டெம்பர் 05) பிரித்தானியாவின் சனல் 4 வெளியிடவுள்ள அதிர்ச்சியூட்டும் ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக ’தி டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பல வருடங்கள் ராஜபச்சக்களின் விசுவாசியாக இருக்கும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருக்கும், ஹன்சீர் அசாத் மௌலானா என்பவர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தி டைம்ஸ் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், அசாத் மௌலானாவிற்கு சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்த்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி, திட்டமிட்ட வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக  சிங்கள ஊடகம் ஒன்றின் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி குறித்த காணொளி செனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது சட்டத்தரணி ஊடாக விடுத்த வேண்டுகோளுக்கு அமைய குறித்த ஒளிபரப்பு பிற்போடப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், சுரேஷ் சலேவிற்கும் இடையிலான தொடர்பு குறித்த அசாத் மௌலானா வெளிப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் உண்மைக்கு புறம்பானவை எனவும், மௌலானா குறிப்பிடும் காலப்பகுதியில் சலே இலங்கையில் சேவையில் இருக்கவில்லை எனவும், சலே ஆவணங்களுடன் செனல் 4விற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும், குறித்த  பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.