பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களுக்கு விஜயம்

  


பிரித்தானிய தூதுவர் சாரா ஹூல்ரன் மற்றும் இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, இருவரும் இன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர்.

இந்தச் சந்திப்பின் போது யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படும் சமுதாயச் சமையலறைக்கும் சென்று பார்வையிட்டார்.  

அத்தோடு, இருவரும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வருகைதந்து நூலகத்தினையும் பார்வையிட்டதுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.