மதத்தின் பெயரால் மத வெறி கொண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு..!



2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் யாருமே சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் நடந்து முடிந்த ஒரு சம்பவமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இன்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ம் திகதி காலை வேளையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியனவற்றில், ஒரே நேரத்தில், தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை கொழும்பின் முன்னணி விருந்தகங்களான ஷெங்ரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் லேக் சைட் உள்ளிட்ட விருந்தகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு 500 பேர் வரையில் காயமடைந்தனர்.

இதுவரை நீதி கிடைக்காத, குற்றவாழிகள் தண்டிக்கப்படாத சம்பவமாக, பல்வேறு பாதிக்கப்பட்டவர்களின் மனதை இன்றும் உலுக்கும் ஒரு நிகழ்வாகவே இது அமைந்துள்ளது.

மதத்தின் பெயரால் மத வெறி கொண்டு நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று வரை தங்களுடைய இன்னல்களில் இருந்து மீண்டெழ முடியாத நிலையில் காத்திருக்கின்ற அதேவேளையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த போதும் தங்களுடைய வாழ்க்கையில் இருந்து சோகங்களையும் மறக்க முடியாமல் வாழ்வையும் கொண்டு செல்ல முடியாமல் திண்டாடும் பலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எதிர்பாராத விதமாக இடம்பெற்ற தாக்குதல் காரணமாக தங்களுடைய உறவுகளைப் பிரிந்து நிற்க்கதியான நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கே அரசாங்கத்தினுடைய உதவிகளும் தமக்கு போதியதாக இல்லாத நிலைமையிலும் நான்கு ஆண்டுகள் கடந்தும் மன அழுத்தங்களிலிருந்து கூட விடுபட முடியாத துப்பாக்கிய நிலையில் வாழ்கின்ற பலரில் தன்னுடைய கணவரையும் தன்னுடைய ஒரு மகனையும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீதான தாக்குதலில் பறிகொடுத்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லடி வேலூர் கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற சசிகுமார் சந்திரிகாவும் ஒருவர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

தனது மகளைக் கற்பிப்பதே எனது ஒரே கொள்கை. அதற்காகவே வாழ்கிறேன். அதற்காக நான் உணவு சமைத்து விற்பனை செய்து வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றேன்.

எனது மகளைக் கற்பிப்பது என்பது பாரிய சவாலாக இருக்கிறது. தொடர்ச்சியான இந்த வன்முறை சம்பவங்களுக்கு இன்று வரை நீதி நிலை நாட்டப்படாதது மாத்திரமன்றி அதில் பாதிக்கப்பட்ட எங்களுக்கான வசதி வாய்ப்புகள் கூட இன்று வரை சரியாக ஏற்படுத்தித் தரப்படவில்லை.

நாங்கள் இறைவழிபாட்டை செய்ய இன்றுவரை எங்களது ஆலயத்தை சரிவர புனரமைக்கவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடியில், தான் வாழ்வது எவ்வாறு என்பது தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்.மாற்று ஏற்பாடுகள் எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.

மாறாக இந்த குண்டு வெடிப்பு தாக்குதலிலே கொல்லப்பட்ட மக்களை பாதுகாப்பதிலும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட ஆலயங்களை புனரமைப்பதிலும் கூட வேற்றுமைகள் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

குண்டுவெடிப்புக்குள்ளான பல்வேறு ஆலயங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயம் இன்னும் புனர்நிர்மான பணிகள் கூட முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகின்றது.

இவை அனைத்தையும் கடந்து தங்களுடைய உறவுகளை இழந்து மீண்டெழ முடியாத துயரங்களோடு வாழ்கின்ற மக்கள் இன்று நான்காவது ஆண்டை கடக்கின்ற போதும் கண்ணீரோடு வாழ்கின்ற சோக வரலாறுகள் தொடர்ந்துவருகிறது.

இதனை விட இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன்று வரை எந்தவிதமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலைமையும் காணப்படுகிறது.

இதனை தாண்டி மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக ஒரு நினைவு தூபியை அமைப்பதற்கு கூட பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்தையும் கடந்து கல்லடி பாலத்திற்கு அருகிலே ஒரு நினைவு தூபி அமைத்திருந்தாலும், இவற்றிற்கெல்லாம் மாறாக மட்டக்களப்பு மாநகர சபையினால் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக மட்டக்களப்பு சுற்றுவட்டத்திற்கு அருகிலே ஒரு நினைவுத்தூவி அமைக்கப்பட்டு காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் கூட மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துக்கள் பெறப்படவில்லை

எது எவ்வாறாக இருந்தாலும் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தங்களுடைய உறவுகளை தொலைத்த பலருடைய வாழ்வு இன்றும் மீண்டெழ முடியாத சோக நிலையில் இருக்கின்றது.

இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் கரிசனை கொண்டு செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக காணப்படுகிறது.

இவ்வாறான பின்னணியிலே நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக அனைவரும் பிரார்த்தித்திருப்போம்.