மோசமான காலநிலையால் 17 பேர் உயிரிழப்பு - 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு, தொடர்ந்தும் வெள்ள அபாயம்


நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தறையில் 6 மரணங்களும் இரத்தினபுரியில் 5 மரணங்களும் காலியில் 2 மரணங்களும் கொழும்பு சீதாவக்க பகுதியில் 3 மரணங்களும் கம்பஹாவில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

இதேநேரம் இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளதோடு 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 123 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 8212 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இதேநேரம் நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்தமையால் மேலும் பல கிராமங்களுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திஹகொட, மாத்தறை, மாலிம்பட ஆகிய பிரதேசங்களில் உள்ள பல கிராமங்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் பிரிவு பணிப்பாளர் சுகீஸ்வர தெரிவித்தார்.

இதேவேளை, அத்தனகலு ஓயா, கிங் கங்கை, களனி மற்றும் களு கங்கைகள் தொடர்ந்தும் அபாய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தனகலு ஓயா பெருக்கெடுத்ததால் கம்பஹா நகரம் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கம்பஹா வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதால் வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அங்குருவாதொட்ட , உடுவர கரந்தவதுகொட பிரதேசத்தில்  வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த 4 பேர் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம்  நேற்று (03) மாலைபதிவாகியுள்ளது.

இதற்கிடையில் வெள்ளத்தை பார்ப்பதற்காக படகு ஒன்றில் 20 பேர் கொண்ட குழு ஒன்று சென்ற போது குறித்த படகு உயர் மின்கம்பியில் மோதி மின்சாரம் தாக்கியதில்,ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் உயிர் தப்பியுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்சிங்கள -  திவலகட பிரதேசத்தைச் சேர்ந்த லொகு சின்ஹாரச்சிகே தமித் குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அனர்த்த பிரதேசங்களை மக்கள் பார்வையிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று பிற்பகல்  மேற்கொண்டார்.

அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான பணிப்புரைகளை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்ளுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  

கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றையதினம்(03) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.  

இந்தநிலையில், மேலும் சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினமும்(04) நாளைய தினமும்(05) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்று தொடக்கம் (04 ஆம் திகதி) தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன்,

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.