இலங்கையின் ஒரு குரங்கிற்கு 25000 ரூபாய்..!


குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் “என்ன நடந்தது” நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, “இந்த திட்டம் சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து எமக்கு வந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவல்களை அமைச்சரவையில் தெரிவிப்போம். இதை செயல்படுத்துவது குறித்து துணைக்குழுவின் ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

சீனாவில் உள்ள 1000க்கும் அதிகமான உயிரியல் பூங்காக்களுக்கு வழங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "அவர்கள் இதனை உடனடியாக செயல்படுத்தத் தயாராக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சுமார் 1000 குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கேட்டார்கள்.

ஆனால் அப்படி அனுமதி கொடுக்க முடியாது. ஒரு குரங்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அவர்கள் செலவிட வேண்டி ஏற்படும்.

விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கூண்டு வகை உள்ளது என்று ஏற்கனவே கூறியுள்ளனர்.

இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைப்பட்டு பேசினாலும் இறைச்சிக்கு விலங்குகளை அனுப்ப மாட்டோம். ஒரு குரங்கை 50,000 அல்லது 75,000 கொடுத்து சாப்பிட அந்த மக்களுக்கு என்ன பைத்தியமா?" என்று தெரிவித்துள்ளார்.குரங்குகள் ஏற்றுமதிக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை – சீன அரசாங்கம்

 

இலங்கையிடம் குரங்குகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பாக தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் சீன நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பரிசோதனை நோக்கத்திற்காக தனியார் சீன நிறுவனமொன்றுக்கு, ஒரு இலட்சம் மக்காக் குரங்குகளை இலங்கை ஏற்றுமதி செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்தகைய கோரிக்கை குறித்து தமக்கு எந்த தகவல்களும் தெரியாது என்றும், எந்தத் தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பத்தை தாம் பெறவில்லை என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்த உறுப்பினராகவுள்ள சீனா, 1988 ஆம் ஆண்டின், அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான சட்டம் அமுலாக்கத்தில் சிறந்த நாடுகளில் சீனாவும் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.